ஊருக்குள் புகுந்த போது செப்டிக் டேங்கில் தவறி விழுந்த காட்டு மாடு: 3 மணி நேரம் போராடி மீட்பு

இளம்பிள்ளை: சேலம் மாவட்டம், கஞ்சமலையில் இருந்து காட்டு மாடு ஒன்று, நேற்று முன்தினம் இரவு, தண்ணீர் தேடி இளம்பிள்ளை அருகே  ராமாபுரம் பகுதிக்குள் புகுந்தது. அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோயில் பின்புறம், தனி நபரால் கட்டப்பட்டுள்ள கழிப்பிட குழியில் தவறி விழுந்தது.  சுமார் 6 அடி ஆழத்தில் விழுந்த காட்டு மாடு அங்கிருந்து வெளியே வர முடியாமல் விடிய, விடிய தவித்தது. இதனை கண்டு நேற்று காலை அந்த  வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையிலான  வீரர்கள் விரைந்து சென்று, செப்டிக் டேங்கில் விழுந்த சுமார் அரை டன் எடை கொண்ட காட்டு மாட்டை, 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

பின்னர்,  கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். கஞ்சமலை சித்தர் கோயில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு மாடுகள்,  தனியார் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள கிணறு, குட்டைகளில் தவறி விழுந்து உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க  வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: