ஆடுகள் மேய்ப்பதற்காக கொத்தடிமையாக இருந்த 2 சிறுவர்கள் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஜெயங்கொண்டம்: ஆடுகள் மேய்ப்பதற்காக கொத்தடிமையாக இருந்த 2 சிறுவர்களை அதிகாரிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமசாமி. இவரது மனைவி விஜயகுமாரி, இவர்களுக்கு நான்கு மகன்களும்,  நான்கு மகள்களும் உள்ளனர். ராமசாமி தினந்தோறும் கிடைக்கக்கூடிய கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு  தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். ஆடுகளை  மேய்ப்பதற்கு ஆட்கள் தேவை என்பதை தெரிந்து கொண்ட ராமசாமி தனது மகன்கள் சிவக்கண்டன் (16) ஐயப்பன் (13) ஆகிய 2 பேரையும் கடந்த ஒரு  வருடத்திற்கு முன்பு ரூ.40,000 பெற்றுக்கொண்டு ஆடுகளை மேய்ப்பதற்காக ரமேஷிடம் அனுப்பியுள்ளார். இதையடுத்து பல்வேறு இடங்களில்  ஆடுகளை மேய்ப்பதற்காக சிறுவர்கள் இருவரும் அனுப்பப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர்.

காசாங்கோட்டை பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் விசாரித்ததில் கொத்தடிமையாக  உள்ளது தெரியவந்தது.கிராம நிர்வாக அலுவலர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் செல்வராஜ், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார், ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் ஆகியோர் உடையார்பாளையம்  கோட்டாட்சியர் பூங்கோதை உத்தரவின்பேரில் கொத்தடிமையாக இருந்த இரண்டு சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.காசான்கோட்டை கிராமத்தில் ஆடுகள் மேய்த்த மீட்டு சென்ற இரண்டு சிறுவர்களையும் கோட்டாட்சியர் பூங்கோதையிடம் ஒப்படைத்தனர்.  கோட்டாட்சியர் பெற்றோர்களிடம் சிறுவர்களை ஒப்படைத்தார். அப்பொழுது ஒரு வருடம் கழித்து தனது மகன்களை பார்த்த பெற்றோர்கள் ஆனந்த  கண்ணீர் வடித்தனர்.பின்னர் கோட்டாட்சியர் கூறும்போது படிக்கும் வயதில் வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் எனவே சிறுவர்களை தொடர்ந்து  படிக்க வைக்க வேண்டும். சிறுவர்களை அரசு பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளை  கேட்டுக் கொண்டார்.

Related Stories: