அருந்ததியர் இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்): உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் படி, கலைஞர் ஆட்சியில் தரப்பட்ட அருந்ததியர் தனி இடஒதுக்கீடு செல்லும் என்பது உறுதியாகி விட்டது. ராமதாஸ் (பாமக நிறுவனர்): எந்த ஒரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறியிருக்கிறது. இது சமூகநீதியை காக்கும் தீர்ப்பாகும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): கலைஞர். பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியது. அன்றைய திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும், அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் இப்போது கிடைத்துள்ள வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது.

திருமாவளவன் (விசிக தலைவர்): உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் அருந்ததியர் இடஒதுக்கீடுக்குப் பாதிப்பு ஏதுமில்லை. இது இறுதித் தீர்ப்பாக இல்லை. கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட விரிவான அமர்வுக்கு வழக்கை அனுப்பத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனை வரவேற்கிறோம். மேலும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 

Related Stories: