செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை

கூடுவாஞ்சேரி: திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி ராஜீவ்காந்தி நகரில் தனியார் செல்போன் டவர் அமைக்க, அந்நிறுவனத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த நிறுவன ஊழியர்கள் நேற்று காலை அப்பகுதிக்கு வந்தனர். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் பொதுமக்கள் மேலைக்கோட்டையூர் - கீரப்பாக்கம் சாலையில் திரண்டனர். அங்கிருந்த செல்போன் டவர் நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, செல்போன் டவர் ஊழியர்கள், அங்கு டவர் அமைக்க மாட்டோம் என வெள்ளைத்தாளில் உறுதிமொழி சான்று எழுதி கொடுத்தனர்.

பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ‘எங்கள் பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றோம். செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவோம். மக்கள் குடியிருக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால், ரவுடிகளை வைத்து எங்களை மிரட்டுகின்றனர். எங்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க கூடாது. மீறி அமைத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்  என்றனர்.

Related Stories: