4 மாதங்களாக காட்சி பொருளாக இருக்கும் மின்மாற்றிக்கு மாலை அணிவித்து இளைஞர்கள் கண்ணீர் அஞ்சலி: சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

திருவெண்ணைநல்லூர்: திருவெண்ணைநல்லூர் அருகே 4 மாதங்களாக காட்சி பொருளாக உள்ள மின்மாற்றிக்கு கிராம இளைஞர்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த ஒட்டநந்தல் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  கிராம பகுதியில் கடந்த சில வருடங்களாக மின்சாரம் பற்றாக்குறை இருந்து வருகிறது.  இதையடுத்து மின் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக மின்சார வாரிய ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிய மின்மாற்றி ஒன்றை எடுத்து சென்று எஸ்1 என்ற மின்மாற்றியுடன் இணைப்பதற்காக செங்கல் மற்றும் சிமெண்ட் பீடம் அமைத்து வைத்து விட்டு சென்றனர்.

நான்கு மாதங்கள் கடந்தும் புதிய மின்மாற்றிக்கு இணைப்பு கொடுக்காமல் காட்சி பொருளாகவே வைத்துள்ளனர். மின் பற்றாக்குறையை சரிசெய்து கொடுக்க கோரி  திருவெண்ணெய்நல்லூர் மின்சாரத்துறை அலுவலகத்துக்கு ஒட்டநந்தல் கிராமத்தைச்சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலர் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காமல்  மின்ஊழியர்கள் மெத்தனமாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஒட்டநந்தல் கிராம இளைஞர்கள் சிலர் புதியதாக வைக்கப்பட்டுள்ள மின்மாற்றிக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து வைத்து மலர் தூவினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: