கம்பம் அருகே முல்லை பெரியார் ஆற்றின் கரை உடையும் அபாயம் - விளைநிலங்களை காத்திட விவசாயிகள் கோரிக்கை

தேனி:  தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை பெரியார் ஆற்றின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். முல்லை பெரியார் அணையிலிருந்து தேக்கடி வழியாக வரும் தண்ணீர் இந்த ஆற்றில், கம்பம் அருகே சுருளிப்பட்டி மனப்படுகையில் உடைப்பு ஏற்படும் அளவிற்கு கரை மிகுந்த சேதமடைந்துள்ளது. இதற்கிடையில் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுவதால், நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெருக்கெடுத்தோடும் தண்ணீரால் சுருளிப்பட்டி மனப்படுகையில் ஆற்றின் கரை விரைவில் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரை உடையும் பட்சத்தில், பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விளைநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படுமென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அதிகளவு விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கரையோரத்தில் செல்லும் கால்நடைகளும் நீரில் மூழ்கி பலியாகின்றன. இந்த நிலையில், முல்லை பெரியார் ஆற்றின் மூலம் 50க்கும் மேற்பட்டுள்ள கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. எனவே ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: