இ-பாஸ் தளர்வால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: கொரோனா தொற்று காரணமாகப் பொது முடக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கும் இடங்களாகச் சுற்றுலாத் தலங்கள் விளங்குகின்றன. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் மலைப் பிரதேசமான வால்பாறையில் கோவை மாவட்டவாசிகளே பொள்ளாச்சி ஆழியாறு எல்லையில் தடுக்கப்பட்டனர். வால்பாறைக்கு சுற்றுலாவுக்கு வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேபோல் மண்டலங்களுக்குள் பேருந்துப் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்ற தளர்வு வந்தபோதுகூட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நீலகிரியில் பணிக்குச் செல்பவர்கள், அத்தியாவசியக் காரணங்களுக்காக சென்றுவரும் நீலகிரி வாழ் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

வெவ்வேறு விதமாகப் பொது முடக்கத் தளர்வு மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டு வந்தாலும் நீலகிரியில் இப்படியொரு கடுமை காட்டாவிட்டால் சுற்றுலாப் பயணிகள் குவிந்து விடுவர். அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவிவிடும் என்ற காரணத்தால்தான் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் இத்தனை கறாராக இருந்துவந்தது. இதனால்தான் ஆரம்பத்தில் மாவட்டத்தில் ஒன்றிரண்டு பேருக்குக் கொரோனா தொற்று இருந்த நிலையிலும் அது கட்டுப்படுத்தப்பட்டது.

மற்ற இடங்களுக்கு இ-பாஸ் வழங்குவது போல் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையவே இ-பாஸ் பெறுவதில் கடுமை காட்டப்பட்டது. இதன் காரணமாக நீலகிரியில் சமீப காலமாகக் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சூழ்நிலையில், இப்போது விண்ணப்பிப்பவர்களுக்கு எல்லாம் இ-பாஸ் கிடைத்துவிடுவதால் வசதி வாய்ப்புள்ள பலரும் இதைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் நீலகிரிக்கு வருகின்றனர். அவர்கள் இங்கே இருக்கும் காட்டேஜ்களில் அறை எடுத்துத் தங்கிவிடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று நீலகிரி மாவட்ட மக்கள் அச்சப்படுகின்றனர்.

Related Stories: