நாட்டு வெடிகுண்டு வெடித்து வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சோலையூர் வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வாயில் காயத்துடன் உயிருக்கு போராடி வரும் காட்டு யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டபாடி சோலையூர் கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒற்றை யானை கிராமத்தில் உள்ள வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. பொதுமக்களின் புகாரை தொடர்ந்து கேரள வனத்துறையினர் இந்த யானையை விரட்டினர்.  அந்த யானை சோலையூரில் இருந்து கோவை மாவட்டம் ஆனைகட்டி தூவப்பதி மலை கிராமத்திற்கு இடம் பெயர்ந்தது. இதுகுறித்து தூவப்பதி கிராம மக்கள் கோவை வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு சதைகள் தொங்கியபடி உணவு உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தது. இதனால், அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவுசெய்து கோவை மாவட்ட வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் யானை கேரள வனப் பகுதியான அட்டப்பாடி சோலையூர் வனப்பகுதிக்கே மீண்டும் சென்றது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் கேரள வனத்துறையினர் யானையை பார்த்த போது வாயில் அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய்ப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது மேலும், யானையின் நாக்கு பலத்த சேதம் அடைந்துள்ளதால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருவதும், உயிருக்கு போராடி வருவதும் தெரியவந்தது. தற்போது, கேரள மாநிலம் வயநாடு வனத்துறை கால்நடை முதன்மை மருத்துவர் அருண் சக்கரியா தலைமையில் வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், யானை உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கால்நடை முதன்மை மருத்துவர் அருண்சக்கரியா தெரிவித்தார்.

Related Stories: