மாற்றுப்பாதையை திட்டமிடாமல் சீரமைப்புப்பணி எந்த ரூட்ல பாஸ் வீட்டுக்கு போறது?: பழநியில் வாகன ஓட்டிகள் குழப்பம்

பழநி: பழநி நகர் முழுவதும் சீரமைப்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் மாற்று சாலைகள் குறித்து முறையாக திட்டமிடப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக பழநி நகரில் தற்போது ரூ.58 கோடி மதிப்பீட்டில் சாலையோர வடிகால் மற்றும் நடைமேடை அமைத்தல், சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக நகர் முழுவதும் ஒரே நேரத்தில் தோண்டி விடப்பட்டுள்ளன.

இதனால் ரயில்வேபீடர் சாலை, பஸ்நிலைய சாலை, பயணியர் விடுதி சாலை, நகராட்சி அலுவலக சாலை, குளத்துரோடு பைபாஸ் சாலை போன்றவை திருப்பி விடப்பட்டுள்ளன. புதுதாராபுரம் சாலையிலும் சீரமைப்புப்பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கு சாலைகள் திருப்பி விடப்பட்டுள்ளன. முறையான திட்டமிடல் இல்லாததால் நகர் முழுவதும் ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசலான சூழல் நிலவுகிறது. போலீசார் நன்கு திட்டமிட்டு சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: