தாதம்பட்டி கண்மாய் செல்லும் ஓடையில் மண்ணை கொட்டி அடைப்பு: தண்ணீர் செல்வதில் சிக்கல்

விருதுநகர்: தாதம்பட்டி கண்மாய்க்கு செல்லும் மழைநீரை தனிநபர் மறித்ததை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விருதுநகர் அருகே மீசலூர் காட்டுப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடை வழியாக தாதம்பட்டி கண்மாய்க்கு செல்கிறது. ஓடையில் மண்ணை கொட்டி தனிநபர் மறித்துள்ளார். மழைக்காலத்தில் வரும் தண்ணீரை தனிநபர் ஒருவர் தனது நிலத்தில் உள்ள பண்ணைக் குட்டைக்கு கொண்டு செல்லும் வகையில் மறித்துள்ளார். கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. மழை பெய்தால் தாதம்பட்டி கண்மாய்க்கு மழைநீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் தனிநபர் தனது நிலத்தில் அமைத்துள்ள ஒரு ஏக்கர் பரப்பளவிலான பண்ணை குட்டை இருமுறை நிறைந்துள்ளது.

தாதம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கூறுகையில், தாதம்பட்டி கண்மாய்க்கு செல்லும் ஓடையை தனிநபர் தனது நிலத்தில் அமைத்துள்ள பண்ணைக்குட்டைக்கு மழைநீர் செல்லும் வகையில் அடைத்துள்ளார். தனிநபருக்காக தாதம்பட்டி கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் தலையிட்டு ஓடையை மறித்து கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றி, தாதம்பட்டி கண்மாய்க்கு மழைநீர் செல்ல மழைக்காலம் துவங்கும் முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.

Related Stories: