இ-பாஸ் முறை ரத்து குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்: வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: இ-பாஸ் முறை ரத்து குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகள் பொது முடக்க அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளதுடன், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பொது முடக்கதால் வைரஸ் பரவலை தடுக்க முடியாது, சற்று தள்ளிப்போடவே முடியும் என சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், தமிழகத்தில் இ-பாஸ் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் முற்றிலும் ரத்து என்ற அறிவிப்பைத் தான் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதில் மாநிலத்திற்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய எந்தவிதத் தடையும் விதிக்கக்கூடாது. இதேபோல் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும், சரக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கக்கூடாது. ஒருவேளை தடை விதிக்கப்பட்டால் அது மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே மத்திய அரசின் அறிவுறுதலை மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இ-பாஸ் முறையை ரத்து செய்வது சவாலானது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை பட்டாளத்தில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவ்விகாரம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அது குறித்து அறிவிப்பார் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தமிழகம் 28 சதவீதம் அளவுக்கு கூடுதலாக தென்மேற்கு பருவமழைப் பொழிவை பெற்றுள்ளது. பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டைவிட நீரின் அளவு அதிகமாக உள்ளது. மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையார் அணைகளில் நீரின் அளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது, என தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: