நலன் பயக்கும் 'தேசிய பணியாளர் தேர்வு முகமை'அமைக்க ஒரு சில கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது : பாஜக

சென்னை : பல்வேறு வகைகளில் நலன் பயக்கும் இந்த தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க ஒரு சில கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரயில்வே, வங்கி, மத்திய அரசு பணியாளர் பணிகளுக்கு, அதாவது, கெசட்டட் அதிகாரி அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளுக்கு தற்போது அந்தந்த துறைசார்ந்த பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய பணியாளர் வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, முதல் நிலை தகுதிக்கான   பொதுவான தகுதித் தேர்வு நடத்தும் வகையில், தற்போது  தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 2020-21 நிதி நிலை அறிக்கையிலேயே இது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 1517. 57 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை. பணியாளர் தேர்வு நடைமுறைகளை இந்த தேசிய முகமை  எளிதாக்குவதோடு, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் இந்த தேர்வுகளுக்கு அவர்கள் செலவிடும்  நேரம் மற்றும் பயண சுமையை குறைக்கும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படும் என்பது சிறப்பானது.  தேர்வு மைய வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை பெருமளவில்  குறைக்கும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும் என்பதும், ஆன்லைன் மூலமாகவே திறனறி தேர்வுகள் நடத்தப்படும் என்பதும் கூடுதல் சிறப்பு.

இதில் பெறும் மதிப்பெண்கள், மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும். தங்களுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்புவோர், எவ்வளவு முறை வேண்டுமானாலும் வயது வரம்புக்குட்பட்டு தேர்வு  எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, அதில் பெற்ற அதிகமதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதே போல், பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு படித்தவர்கள், மேல்நிலை பள்ளி முடித்தவர்களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தப்படும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வி தாள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமலில் உள்ள இடஒதுக்கீடு முறை தொடரும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது. ஒரே தேர்வு நடத்துவதன் மூலம் தற்போதைய நீண்ட கால தேர்வு முறை அகற்றப்பட்டு  பணியாளர் தேர்வு விரைந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

தற்சமயத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்று துறைகளுக்கான தேர்வாக இவை இருந்தாலும், எதிர்காலத்தில், விருப்பப்பட்டால் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் கூட இந்த தகுதி தேர்வின் அடிப்படையில், தங்கள் நிறுவனங்களின் பணியாளர் நியமனங்களை முடிவு செய்வது, தொடர்புடைய அமைப்புகளின் பணியாளர் தேர்வுக்கான கால விரயம் மற்றும் நிதி விரயத்தை அதிகளவில் குறைக்கும்.

கல்வியறிவு அதிகமுள்ள தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் நலன் பயக்கும் இந்த தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க ஒரு சில கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சீர் திருத்தமானது, மாநில உரிமைகளை பறிக்கும் என்றும் மொழி ரீதியான பிரச்சினைகளை உருவாக்கும் என்றெல்லாம் உள்நோக்கத்தோடு விமர்சனங்களை செய்வதன் மூலம், சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கின்றவர்களின் எண்ணங்களை மக்கள் தவிடு பொடியாக்குவார்கள் என்பது உறுதி. எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: