13வது திருத்தத்தின் மூலம் பெற்ற இலங்கை தமிழர்களின் உரிமைகளை பறிக்க இந்தியா அனுமதிக்க கூடாது: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: இலங்கை தமிழர்கள் 13வது திருத்தத்தின் மூலம் பெற்ற உரிமைகளை பறிக்க இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சமீபத்தில் இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிற ராஜபக்சே நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி 19வது திருத்தத்தை ரத்து செய்ய இருக்கிறார்.

ராஜிவ் காந்தி 1987ல் இந்திய - இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.  இதன்படி அதிக அதிகாரங்கள் தமிழர்களுக்கு மாகாணங்களில் வழங்கப்பட்டது.  இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம் 13வது திருத்தம் தான். ஏற்கனவே தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட முகாம்களில் ஏறத்தாழ 1 லட்சம் அகதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் குறித்து ஒரு செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசின் பரிசீலனைக்கு வைக்க வேண்டும்.

 இலங்கை தமிழர்கள், ராஜிவ் காந்தியின் முயற்சியால் 13வது திருத்தத்தின் மூலம் பெற்ற உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பறிப்பதற்கு மோடி தலைமையிலான இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அண்டை நாடான இந்தியாவிற்கு இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்த கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: