ஆவடி, காட்டூர் தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் கன்டெய்னர் லாரியில் பதுக்கிய ரூ2 கோடி குட்கா பறிமுதல்: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே காட்டூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் கன்டெய்னர் லாரிகளில் பதுக்கி வைத்திருந்த 25 டன் எடையுள்ள குட்காவை குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோனின் உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு இன்று காலை ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து அப்பிரிவின் டிஎஸ்பி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அதிகாரிகள் அங்குள்ள தனியார் குடோனில் புகுந்து அதிரடி சோதனை செய்தனர். அப்போது 2 கண்டெய்னர், 3 மினி லாரிகளில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அதில் 25 டன் எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கன்டெய்னர் மற்றும் மினி லாரி உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, தனியார் குடோன் உரிமையாளர் பாலாஜி, பாபுலால், ரஞ்சித் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வருவதுபோல் ஸ்டிக்கர் ஒட்டி இந்த ஊரடங்கு காலத்தில் கன்டெய்னர் லாரி, மினி லாரிகளில் வாகன எண்ணை மாற்றி குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளியான பொன்னேரி அடுத்த காரனோடை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.2 கோடி என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, சென்னை அடுத்த புழல் பகுதியில் லாரியில் வெங்காய மூட்டைக்குள் 500 கிலோ கஞ்சா கடத்தி வந்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போதைய ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய காலத்தில் போதை ஆசாமிகள் அரசு மதுபானம் மூலம் தங்களது போதையைத் தீர்த்துக் ெகாண்டனர். அது கிடைக்காத ஊரடங்கு காலத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அத்தியாவசிய பொருட்களின் பெயரில் கடத்தி வந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: