கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல் ரூ.40 கோடி நோட்டுகள் தேக்கம்

சிவகாசி : கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சிவகாசியில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான நோட்டுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 100க்கும் மேற்பட்ட பாடநோட்டு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமில்லாமால் வெளி மாநிலங்களுக்கும் சுமார் 70 சதவீத நோட்டு புத்தகங்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜூலை வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேவையான கிங்சைஸ், லாங்சைஸ், ரூல்டு, அன்ரூல்டு, ரெக்கார்டு நோட்டுகள் தயாரிக்கின்றனர். இதன்படி இந்தாண்டுக்கான ஆர்டர்களை கடந்த நவம்பரிலேயே கொடுத்துள்ளனர். இதில், 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் திடீரென மூடப்பட்டன. இதனால், பாடநோட்டு உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உறுதி இல்லாத நிலையில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான பாடநோட்டுகள் தேக்கமடைந்து இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

நோட்டு உற்பத்தியாளர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘கொரோனா தொற்றால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதனால், தயாரித்த நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. நோட்டு தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். சிவகாசியில் உள்ள குடோன்களில் ரூ.40 கோடி மதிப்பிலான பாடநோட்டுகள் தேக்கமடைந்துள்ளன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு உரிய நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘தினசரி 4 மணி நேரம் மட்டுமே, பாட நோட்டுகளை பைண்டிங் செய்யும் பணி கொடுக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை கவனிக்க முடியவில்லை. வாங்கிய கடனையும் கட்ட முடியவில்லை’’ என்றனர்.

Related Stories: