ஊரடங்கை மீறி திருவாரூர் கமலாலய குளத்தில் சலவை துணி துவைப்பதை தடுக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் கமலாலய குளத்தில் ஊரடங்கினை மீறி சலவை துணிகளை துவைப்பதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்து வருகிறது. கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என சம அளவு பரப்பளவை கொண்ட இந்த கோயிலில் 5 வேலி நிலப்பரப்பில் இருந்து வந்த ஓடை என்பது ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி விட்ட நிலையில் கோயில் மற்றும் குளம் மட்டும் இருந்து வருகிறது. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தேரான இக்கோயிலின் ஆழித் தேரோட்டத்திற்கு பின்னர் கமலாலய தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதுமட்டுமின்றி இந்த குளத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியமாக கருதப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதத்திற்கும் மேலாக இந்த குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கும், முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற ஆடி அமாவாசை தினத்தில் கூட முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடினர். இவ்வளவு கடுமையாக கோயில் நிர்வாகம் குளத்தின் நான்கு புறமும் பூட்டு போட்டு அடைத்து இருக்கும் நிலையில் இதனை மீறி இந்த குளத்தில் டெக்கரேஷன் மற்றும் சலவை துணிகள் அடிக்கடி துவைப் பதால் தண்ணீர் மாசு பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் தற்போது தடை உத்தரவு அமலில் இருக்கும்போது இதற்கு மட்டும் கோயில் நிர்வாகம் எப்படி அனுமதி அளிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தடுக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: