நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: கோவையில் பரிதாபம்

கோவை: கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியர். இவர்களது ஒரே மகள் சுபஸ்ரீ (19). இவர் நாமக்கல்லில் பள்ளி படிப்பை முடித்தார். கடந்த 2 ஆண்டாக இவர் மருத்துவ படிப்பில் சேர தீவிரம் காட்டி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய இவருக்கு பி.டி.எஸ் என்ற பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சுபஸ்ரீ, எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பினார். பல் மருத்துவ படிப்பில் சேரவில்லை. பொது மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கோவையில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த முறை நீட் தேர்வில் தான் எதிர்பார்க்கும் அளவு மதிப்பெண் கிடைக்குமா?, மருத்துவ படிப்பில் சேர முடியுமா? என சுபஸ்ரீ மன குழப்பத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு பயத்தால் சுபஸ்ரீ தற்கொலை செய்தது கோவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஸ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை. சுபஸ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* ஆன்லைனில் பாடம் புரியாததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அபிஷேக் (15). கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அபிஷேக் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் பாடங்கள் புரியவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அபிஷேக், நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: