வாலாஜாபாத் அருகே பரபரப்பு விநாயகர் சிலை செய்யும் தொழிற்கூடங்களுக்கு சீல்: அதிகாரிகளை கண்டித்து தொழிலாளர்கள் மறியல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வாலாஜாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில்14 விநாயகர் சிலை செய்யும் தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. இங்கு பெரிய அளவிளான விநாயகர் சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, வாலாஜாபாத் தாசில்தார் மித்ராதேவி, மேற்கண்ட தொழில் கூடங்களுக்கு நேற்று சீல் வைத்தார். இதில், அய்யம்பேட்டை தொழிற்கூடத்துக்கு சீல் வைத்தபோது, அங்கிருந்த ஊழியர்கள், அதிகாரிகளிடம் சமரசம் பேசினர். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதையறிந்ததும் அப்பகுதி பாஜவினர் அங்கு சென்றனர். தொழிற்கூடங்களுக்கு சீல் வைக்க கூடாது என தாசில்தார் மித்ராதேவி, டிஎஸ்பி மணிமேகலை ஆகியோரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை.

இதனால், ஆத்திரதடைந்த அவர்கள், வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டாக சிலை செய்யும் தொழில் இல்லாமல் கடும் சிரமம் அடைந்துள்ளோம். கொரோனா காலத்தில், சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவியையும்  அரசு வழங்கவில்லை. இதனால், பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளோம்.

எங்களது தொழிற்கூடங்களில் சீல் வைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தொழில் கூடங்களில் நாங்கள், குடும்பத்துன் வாழ்கிறோம். இங்கு சீல் வைத்தால், நாங்கள் எங்கு செல்வது என கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர், மீண்டும் தொழிற்கூடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

Related Stories: