மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!: சாலை வரி, இ - பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை..!!

மதுரை: மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களை மிகப்பெரிய சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. வாகன ஓட்டுனர்கள் 6 மாத காலமாக சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை மற்றும் மற்ற செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பாக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக 500க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தங்களுடைய சுற்றுலா வாகனங்களை முன்னிறுத்தி முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து தான் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலையில், தங்களுடைய மூன்று ஆண்டுகால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். வாகன கடன் வட்டியை ரத்து செய்திட வேண்டும். மேலும் வாகன ஓட்டுனர்களின் குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். இ - பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். ஒரே நாடு ஒரே பெர்மிட் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உடைகளில் கறுப்பு நிற பேட்சுகளை அணிந்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று சென்னையிலும் போராட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை எனில் இப்போராட்டம் தொடர்ச்சியான ஒரு போராட்டமாக நடைபெறும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: