திண்டுக்கல்லில் அடுத்த போஸ்டர் பஞ்சாயத்து ‘ஓபிஎஸ் தமிழக முதல்வர்; இபிஎஸ் துணை முதல்வர்’: பதவிகளை மாற்றி அமைச்சர் ஆதரவாளர்கள் அதிரடி

திண்டுக்கல்: ஓபிஎஸ்சை முதல்வராகவும், இபிஎஸ்சை துணை முதல்வராகவும் குறிப்பிட்டு, அவர்களது கட்சிப் பொறுப்புகளையும் மாற்றி, திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தலைமையில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் வேட்பாளர் தாங்கள்தான் என கடந்த வாரம்  போஸ்டர் சண்டையில் ஈடுபட்டனர். துணை முதல்வரின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அவரது தொகுதியான போடியில், ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் வேட்பாளர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. மூத்த அமைச்சர்களின் பல மணிநேர சமரசத்திற்கு பிறகு முதல்வர் வேட்பாளர் பிரச்னை சற்றே ஓய்ந்தது.

தற்போது அதிமுக சார்பில் மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், மேற்கு மாவட்டச் செயலாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டனர். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜசேகரன் ஆகியோரை வாழ்த்தி திண்டுக்கல் பகுதியில் அவர்களது ஆதரவாளர்களால் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில், ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக முதல்வர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை தமிழக துணை முதல்வர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அதிமுகவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெயர் தவறுதலாக மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பில் காரணம் கூறப்பட்டாலும், இது வேண்டுமென்றே நிகழ்ந்ததாகவே திண்டுக்கல் மாவட்ட அதிமுகவின் மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதிமுகவில் நடந்து வரும் அதிகார போட்டி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

* அணி மாறியதால் பதவி அமைச்சருக்கு அதிருப்தி?

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன், துவக்கத்தில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அவர் தர்மயுத்தம் நடத்தியபோது உடனிருந்தவர்களில் இவரும் ஒருவர். தற்போது இவர் எடப்பாடி அணியுடன் நெருக்கம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இவருக்கும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த முறை தனது நத்தம் தொகுதி மாற்றப்பட்டதற்கும், கட்சியில் ஓரங்கட்டப்பட்டதற்கும் திண்டுக்கல் சீனிவாசனே காரணமென தொடர்ந்து புகார் கூறி வந்தார். இந்த சூழலில் மாவட்டத்தை பிரித்து நத்தம் விஸ்வநாதனை திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்த அதிருப்தியில், அமைச்சரின் ஆதரவாளர்கள் இவ்வாறு ஒட்டியிருக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

Related Stories: