தூத்துக்குடி அருகே பயங்கரம் குண்டு வீசி போலீஸ்காரர் படுகொலை: மற்றொரு குண்டு வெடித்ததில் ரவுடியும் சாவு

நெல்லை: வல்லநாடு மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த கொலை கும்பலை போலீசார் பிடிக்க முயன்ற போது, வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு குண்டு வெடித்ததில் ரவுடி பலியானார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த பிச்சையா பாண்டியன்  மகன் துரைமுத்து (34). பிரபல ரவுடியான இவர் மீது இரட்டை கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வந்து தலைமறைவான ரவுடி துரைமுத்து, வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பாழடைந்த  ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துரைமுத்துவைப்பிடிக்க ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் எஸ்ஐ முருகபெருமாள், ஏட்டுகள் வேம்புராஜ், குணசேகரன், நாராயணன், காவலர்கள் ஆனந்தராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று மதியம் 1 மணிக்கு அங்கு விரைந்து சென்றனர். அப்போது மலையடிவாரத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ரவுடி துரைமுத்துவுடன் 4 கூட்டாளிகளும் முகாமிட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும்  துரைமுத்துவும் அவரது கூட்டாளிகளும் தப்பியோடினர். போலீசாரும் தொடர்ந்து அவர்களை விரட்டிச்  சென்றனர்.

ஒரு கட்டத்தில் துரைமுத்து தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் மீது திடீரென வீசினான். இதை போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துரைமுத்து வீசிய வெடிகுண்டு காவலர் சுப்பிரமணியன் (30) தலையில் விழுந்து வெடித்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதையடுத்து மற்றொரு குண்டை போலீசார் மீது வீச முற்படும் போது அது ரவுடி துரைமுத்துவின் கையிலேயே பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் துரைமுத்துவும் படுகாயமடைந்தார்.

மலையடிவாரத்தில் திடீரென வெடிகுண்டுகள் வெடித்ததால் அந்தப் பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. தகவலறிந்ததும் நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார்  அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி சப் கலெக்டர் சிம்ரன் ஜித்சிங் கலோன், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மலையடிவாரத்தில் இருந்து காவலர் சுப்பிரமணியன் உடல் தூக்கி வரப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அதிரடிப்படை வாகனத்தில், காவலர் சுப்பிரமணியன், படுகாயமடைந்த துரைமுத்து ஆகியோரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு துரைமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிரடிப்படையினர் தொடர்ந்து மலையடிவாரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த துரைமுத்துவின் கூட்டாளிகளான சாமிநாதன்(30), பலவேசம்(32) உள்பட 3 பேரை பிடித்தனர். தப்பியோடிய மேலும் சிலரை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரு கொலை வழக்கில் துரைமுத்துவுடன் கைதாகி ஜாமீனில் வந்து தலைமறைவானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ரவுடி கும்பல் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் ஏரல் அருகே பண்டாரவிளை. இவர் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு புவனேஸ்வரி (27) என்ற மனைவியும், சிவஹரீஸ் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. புவனேஸ்வரி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் துரைமுத்து உள்பட 5 பேர் கும்பல் கடந்த 24.11.2018ல் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரைச் சேர்ந்த வினோத் (30), குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (32) ஆகியோரை ஏரல் ஆற்றில் வைத்து வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிந்து துரைமுத்து உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய துரைமுத்துவின் சகோதரர் கண்ணன், கடந்த 2019ல் ஸ்ரீவைகுண்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிக்குப் பழியாக 22.12.2019ல் நெல்லை அடுத்த பழையப்பேட்டை கண்டியப்பேரி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த இசக்கிமுத்து என்ற கணேசபாண்டியனை துரைமுத்து உள்ளிட்டவர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து துரைமுத்து உள்பட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த 5 பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் தான் மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்த துரைமுத்து கும்பலை நேற்று போலீசார் தேடிச் சென்ற போது வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் கொல்லப்பட்டார். மற்றொரு வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் துரைமுத்துவும் பலியானார்.

* எஸ்ஐ கொலையில் தொடர்பு

கடந்த 2010 ஜனவரியில் நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே எஸ்ஐ வெற்றிவேல் பைக்கில் சென்ற போது ஆள்மாறாட்டத்தில் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் துரைமுத்துவின்  சகோதரர்களுக்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கார், பைக் பறிமுதல்

துரைமுத்து மற்றும் கூட்டாளிகள் தங்கியிருந்த கட்டிடம் அருகே வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு கார், இரண்டு பைக்குகள், அரிவாள்கள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

* கூட்டாளி வீடுகளில் சோதனை

துரைமுத்துவின் கூட்டாளிகள் கிராமங்களில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களது வீடுகளில் நாட்டு ெவடிகுண்டுகள், அதற்கான மூலப் பொருட்கள் வைத்துள்ளனரா என போலீசார் நேற்று நள்ளிரவு முழுவதும் சோதனை நடத்தினர்.

* 3 மாதங்களாக வெடிகுண்டு தயாரிப்பு

வல்லநாடு மலையடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் வேலி போடப்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வெளி மான்கள் சரணாலயமாகும். போலீஸ்காரரை குண்டுவீசி கொன்ற ரவுடி துரைமுத்துவின் உறவினர் ஒருவர் வனத்துறையில் பணியாற்றுகிறார். அவரது உதவியோடு வல்லநாடு மலையடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய கட்டிடத்தில் கடந்த 3 மாதங்களாக துரைமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கியிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்துள்ளனர். அங்கு அவர்கள் இரவு வேளைகளில் மது குடித்து விட்டு சீட்டாட்டம், கேரம் போர்டு விளையாடி பொழுதை கழித்துள்ளனர்.

* காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: முதல்வர் எடப்பாடி உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்ய சென்றபோது, அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.அரசு பணி மேற்கொள்ளும்போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

* போலீசுக்கே பாதுகாப்பில்லை: சுப்பிரமணியனின் அண்ணன் கண்ணீர்

வெடிகுண்டு வீச்சில் காவலர் சுப்பிரமணியன் பலியான தகவல் அறிந்து நேற்று மாலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவரது அண்ணன் சித்தர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். அப்போது சித்தர் கூறுகையில், நாங்கள் சகோதரர்கள் 4 பேர். எனது தம்பி சுப்பிரமணியன் காவல்துறையில் நேர்மையாக பணியாற்றி வந்தார். அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று காலை அனைவரும் கோயிலுக்கு சென்று அவரது மகனுக்கு மொட்டை போட்டு விட்டு வந்தோம். மதியம் ரவுடி கும்பலை பிடிக்கச் செல்வதாக கூறிச் சென்றார். டிவியில் வெடிகுண்டு வீச்சில் தம்பி இறந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். போலீசார் போனில் சுப்பிரமணியன் இறந்தது குறித்து தெரிவித்ததும் நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்றோம். அவரது உடல் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயநாராயணம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டார். இப்போது எனது தம்பி சுப்பிரமணியன் நிராயுத பாணியாக சென்றுள்ளார். தற்காப்புக்கு கூட ஆயுதங்கள் இல்லாததால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனை கோடி கொடுத்தாலும் என் தம்பியின் உயிரை திரும்ப பெற முடியாது என கண்ணீர் மல்க தெரிவித்தார். சுப்பிரமணியனின் தந்தை பெரியசாமி, “எனது மகன் 2017ல் காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று போலீஸ் வேலையில் சேர்ந்தான். எப்பொழுதும் கடமை உணர்வோடு பணியாற்றி வந்த மகனை இழந்து விட்டேனே” என்று கூறி அழுதார்.

Related Stories: