கேரளாவுக்கு சென்ற தமிழக லாரிகள் மீது கல்வீசி தாக்குதல்: நடவடிக்கைகோரி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

கம்பம்: தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற டிப்பர் லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். தேனி மாவட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் பாறைக்கற்கள், பாறைப்பொடி ஆகியவை கேரளாவுக்கு தினசரி கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கேரளா சென்ற லாரிகளை, அணைக்கரை அருகே, சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்டப்பனை போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், கேரளாவில் தமிழக டிப்பர் லாரிகள் மீது கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் தேனி மாவட்ட டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் நேற்று காலை போராட்டம் நடத்தினர். இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘தமிழக டிப்பர் லாரியை கேரளாவில் தாக்கியவர்கள் மீது கேரள போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து லாரி டிரைவர்களின் உயிரை காக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: