உயர்நீதிமன்ற தீர்ப்பு ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது: சிஇஓ பங்கஜ்குமார் கருத்து

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது என இந்நிறுவன சிஇஓ பங்கஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. சட்டப்போரட்டத்தை தொடருவோம். உறுதுணையாக இருப்போர் அனைவருக்கும் நன்றி. 25 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்திருக்கிறது. ஆலை வலுவான காரணங்கள் இன்றி மூடப்பட்டதை மற்ற முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். ஆலை மூடப்பட்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்ட வர்த்தகத்தில் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

அரசியல் காரணங்கள் உள்ளதா? இல்லையா? என்பதை விட நீதித்துறையை நம்பி சட்டப்போரட்டத்தை தொடர்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரத்தை இறக்குமதி செய்வது நாட்டிற்கே பெரிய இழப்பு. தீர்ப்பின் முழு விவரம் தெரிந்த பின் சட்டபூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார். முன்னதாக, தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: