சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த தோனி: ஒரே ‘கூல் கேப்டன்’...முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் புகழாரம்.!!!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மகத்தான சாதனை வீரருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனி (39), கடந்த 2004ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள்  போட்டியில் அறிமுகமானார். ‘மாஹி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி, 2005ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி விசாகப்பட்டிணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அதிரடியாக 148 ரன் விளாசியபோது ஒட்டுமொத்த தேசமே கொண்டாடும் நட்சத்திரமாக ஒளிரத் தொடங்கினார். தனது மின்னல் வேக விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர், மிக வேகமாக முன்னேறி  இந்திய அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார்.

இவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்  போட்டியிலும் அசைக்க முடியாத அணியாக முத்திரை பதித்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி டி20 உலக கோப்பை (2007), ஐசிசி ஒருநாள் உலக  கோப்பை (2011), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற  மகத்தான சாதனை தோனியின் மகுடத்தில் கோகினூர் வைரமாக ஜொலிக்கிறது. 2014ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி,  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமூக  வலைத்தளத்தில் நேற்று அறிவித்தார். இதையடுத்து, அவரது 15 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய, நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்; தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மஹேந்திர சிங் தோனியின் பின்வாங்காத கடின உழைப்பும், கிரிக்கெட்டைக் குறித்த ஆழமான நுண்ணறிவும் இந்திய கிரிக்கெட்டை பெரிய உச்சிக்கு கொண்டு சென்றது. அவருடைய நிதானம், மோசமான சூழ்நிலைகளையும் இந்திய நாட்டுக்கு சாதகமானதாக மாற்றியது. அவர் மக்களின் மனதில் எப்போதும் நிலைத்திருப்பார்” என்று  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முன்னாள் திமுக தலைவரும் , முன்னாள் முதல்வருமான கருணாநிதியுடன் தோனி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,  “நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் கூல் அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: