ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சச்சின் பைலட்டுக்கு அழைப்பு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி புரியும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

மேலும், இந்த பரபரப்பு நிறைந்த அரசியல் சூழலில், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை என கூறி வந்த சச்சின் பைலட், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.  இதில் சமரசம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்சியில் சில குழப்பங்கள் நடந்து வந்தபோதிலும், நாடு, மாநிலம், மக்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் நலனுக்காக நாங்கள் அவற்றை மன்னிக்க வேண்டிய மற்றும் மறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: