பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு  பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணையின்  நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 101.17 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,432 கன அடியாக உள்ள நிலையில்,  அணையில் நீர் இருப்பு 29.6 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையிலிருந்து பாசனம்  மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1200 கனஅடி நீர்  வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து நாளை  முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பவானிசாகர்  அணையிலிருந்து கீழ்பவானி திட்ட கால்வாய்கள் மூலம் கீழ்பவானி திட்ட பிரதானக்  கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்  இரட்டைப்படை மதகுகளின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக  பாசனத்திற்கு நாளை (14ம் தேதி) முதல் 120 நாட்களுக்கு 23,846.40 மி.கன அடி  தண்ணீர் திறக்கப்படும். இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி,  பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள், திருப்பூர்  மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி  வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள்  நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற  வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது. நாளை (14ம் தேதி) காலை  பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Related Stories: