கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு

சென்னை: கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் துறையின் பாஸ்வேர்டை திருடி விவசாயிகள் அல்லாத பல லட்சம் பேர் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, விவசாயிகளுக்கான நிதியுதவியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மட்டுமின்றி வேறு மாவட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பதிவு செய்தவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. விவசாயிகளின் கிசான் திட்டத்தில் இனி தவறு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.

Related Stories: