தவறாக கைது செய்ததற்காக தண்டம் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கூடுதலாக ரூ.1.30 கோடி நஷ்டஈடு: கேரள அரசு வழங்கியது

திருவனந்தபுரம்: விண்வெளி ஆய்வு ரகசியங்களை கடத்திய வழக்கில் தவறாக கைது செய்யப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, கேரள அரசு மேலும் ரூ.1.30 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்தியதாக 26 ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை கேரள போலீஸ் கைது செய்தது. பின்னர்,  நம்பி நாராயணன் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, வழக்கில் தவறாக கைது செய்தற்காக நஷ்டஈடு கோரி, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், முதல்கட்டமாக அவருக்கு ரூ.60 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. மேலும், கூடுதல் நஷ்டஈடு வழங்குவது பற்றி அவருடன் கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்தது. இதன்படி, 2019ல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், மேலும் ரூ.1.30 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த தொகையை நம்பி நாராயணனிடம் கேரள அரசு அதிகாரிகள் வழங்கினர்.

* இஸ்ரோ முதன்மை விஞ்ஞானிகளில் நம்பி நாராயணனும் ஒருவர்.

* அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றவர்.

* ஏவுகணை திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.

* வழக்கு முடிந்த பிறகு மீண்டும் பணியில் சேர்ந்து, 2001ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Related Stories: