குற்றாலத்தில் பீதியை கிளப்பும் ஒற்றை யானை

தென்காசி: குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒன்றை யானை ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். குற்றாலத்தில் கடந்த மார்ச் 24ம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகின்ற போதும், கொரோனா நோய் தொற்று ஊரடங்கு அமலில் இருப்பதால் குளிக்க தடை நீடிக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் ஐந்தருவியில் காட்டுப்பன்றி ஒன்று அருவியிலிருந்து விழுந்து இறந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை யானை ஒன்று கரடி அருவி, குண்டர்தோப்பு பகுதி, வெண்ணைமடை குளம் பகுதிகளில் சுற்றித் திரிவதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். மேலும் சிலர் செல்போனிலும் யானை நிற்கும் காட்சியை பதிவு செய்துள்ளனர். இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: