செப்.10ல் தான் ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி; குமரி கோயில்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் இல்லை: ஊரடங்கால் பக்தர்கள் ஏமாற்றம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று கோயில்களில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் இல்லை. கேரளாவில் அடுத்த மாதம் தான் கிருஷ்ண ஜெயந்தி என்பதால், குமரியிலும் அடுத்த மாதம் தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கிருஷ்ணர் பிறப்பையொட்டி வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கால், முக்கிய கோயில்களில் அடைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிறிய கோயில்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தினர். ஆனால் குமரி மாவட்டத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. குமரி மாவட்ட குருவாயூர் கோயில் என இதை அழைப்பார்கள். இங்கு குழந்தை வடிவில் கிருஷ்ணர் காட்சி அளிக்கிறார். வழக்கமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். தற்போது ஊரடங்கால் கோயில் அடைக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. இன்று காலையிலும் வழக்கமான பூஜைகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில், கேரள பாரம்பரியப்படி தான் பூஜைகள் நடக்கின்றன. ரோகினி நட்சத்திரம், அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணர் அவதரித்தார்.

எனவே குருவாயூர் உள்ளிட்ட கோயில்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம்தேதி தான், கோகுலாஷ்டமி நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்ட கோயில்களிலும் செப்டம்பர் 10ல் தான் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பூட்டப்பட்டு இருந்தாலும் வெளியே நின்றவாறு இன்று ஏராளமான பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்தனர். ஆனால் நாகர்கோவிலில் ஒரு சில இடங்களில் வீடுகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி,  மா கோலமிட்டு கிருஷ்ணரை வரவேற்று பூஜைகள் நடத்தினர்.

Related Stories: