உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்வு: தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் தகவல்

உதகை: உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தேவை அதிகரித்து விவசாயிகள் லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் காய்கறி 7,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. அதில் கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட் மேட்டுப்பாளையம், சென்னை போன்ற மொத்த சந்தைகளுக்குக் கொண்டுச் செல்லப்படுகிறது. கேரட் மற்றும் உருளைக்கிழங்கு மூலமே நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் மழையின்மை மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் கேரட்டுக்கு விலை கிடைக்காத போது, அவை கால்நடைகளுக்குத் தீவனமாகி விடுகின்றன. இதனால், விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட்டை மதிப்பு கூட்டுவது மற்றும் பதப்படுத்துவது போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மத்திய அரசு அறிவித்துள்ள ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தின் விளைபொருளாக கேரட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கூறியுள்ளார். இத்திட்டம் 2021 ஆண்டு முதல் 2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: