சொத்தில் பெண்களுக்கு சம உரிமை..சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி

சென்னை: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கு உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பளித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதிவானது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.

சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியம் போற்றுபவர்கள் மத்தியில் ஆதரவு கரம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது, என்று கூறியுள்ளார்.

Related Stories: