நாகையில் மீண்டும் எரிவாவு குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்...!!! 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்'என்ற அறிவிப்பு என்னவாயிற்று? விவசாயிகள் கேள்வி!

நாகை:  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் நாகை அருகே எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை முழுவதுமாக நிறுத்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கெயில் நிறுவன கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து சீர்காழி அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை எடுத்து வருகிறது. இதனை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக வேட்டங்குடி, எடமணல், திருநகரி வழியாக சுமார் 32 கி.மீ தொலைவிற்கு எரிவாயு பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தொடங்கியது.

விவசாயிகளின் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், திருநகரி, வெள்ளக்குளம், உச்சிமேடு ஆகிய இடங்களில் கெயில் நிறுவனம் அவசர கதியில் எரிவாயு குழாய்களை பதித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்த அறிவிப்பு என்னவாயிற்று? என அவர்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: