சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 4 காவலர்களுக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் காவலர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  சோழவரம் காவல் நிலையத்தில் வாகன பரிசோதனை, குற்ற வழக்குகள் என போலீசார் குற்றவாளிகளுடன் அதிகளவு தொடர்பில் இருப்பதால் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள், காவலர்கள் என சுமார் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, மற்ற காவலர்களும் கொரோனா பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவற்றின் முடிவுகள் வெளியான நிலையில்,  உதவி ஆய்வாளர், 2 சிறப்பு ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் என மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே சோழவரம் காவல் நிலையத்தில் மொத்தமாக 12 காவலர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் முழுவதும் மீண்டும் ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்காலிகமாக அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தற்போது காவல் நிலையமானது இயங்கி வருகிறது.

Related Stories: