கொரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்படவில்லை: அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு.!!!

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தேசிய ஊடரங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இதுவரை சாமானியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என எந்த தரப்பையும் கொரோனா விட்டு  வைக்கவில்லை.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனாவிற்கான ஆரம்ப  அறிகுறி எனக்கு தென்பட்டது. அதை தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது என் உடல்நிலை சீராக உள்ளது, இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்’’ என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான  பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விரைவில் குணமடைய வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் செய்தி வெளியிட்டனர்.

தொடர்ந்து, டெல்லி அருகே அரியானாவின் குருகிராமில் உள்ள மெடன்டா மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், டெல்லி வடகிழக்கு பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, தனது டுவிட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாதிப்பு இல்லை முடிவு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து அமித்ஷா குணமடைந்ததாக வெளியான தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்த, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அமித்ஷா குணமடைந்ததாக வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் நீக்கியுள்ளார்.

Related Stories: