தாமிரபரணி ஆறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4ம்கட்ட பணிகளை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்: இன்பதுரை எம்எல்ஏ தகவல்

பணகுடி: தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் 13 டிஎம்சி தண்ணீர்  வீணாக கடலில் கலக்கும் அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தின் தென் பகுதிகளான நாங்குநேரி ராதாபுரம் போன்ற பகுதிகள் வறட்சியால் வாடும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று தண்ணீரை திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடும் வகையில் தாமிரபரணி ஆறு-நம்பியாறு-கருமேனியாறு-இணைப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என சாத்தான்குளம் இடைத்தேர்தலின் போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு இந்தத் திட்டத்திற்கு  அரசாணை வெளியீட்டு சுமார் 99 கோடி ரூபாயை செலவு செய்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் கடந்த 2013 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் ஒப்புதலை பெற்று வந்தார். பின்னர் இந்த வெள்ள நீர் கால்வாய் பணிகள் வேகம் எடுத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்பு இதற்கான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இந்தத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தினார். கடந்த 19-2-2019 அன்று ரூ.261 கோடி மதிப்பிலான 3 ம் கட்ட பணிகளுக்கான அரசாணை வெளியிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ராதாபுரம் எம்எல்ஏவும் தமிழக உறுதிமொழி குழு தலைவருமான இன்பதுரை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது:- வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளை, நாங்குநேரி ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய நான்கு தொகுதிகள் முழுமையாக பயன் பெறுகின்றன. இத்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 23040 ஹெக்டேர் நிலபரப்பு பாசன வசதி பெறும்.  தற்போது இத்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக அரசு ரூ.160 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்துது பணிகளுக்கான ஆணை வழங்கப்படும் நிலை உள்ளது. நாளை நெல்லை வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெள்ளநீர் கால்வாயின் நான்காம் கட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். நான்காம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெற்று தாமிரபரணி தண்ணீர் ராதாபுரம் தொகுதிக்கு வந்தடையும். நான்காம் கட்ட பணிகள் மூலமாக சுவிசேஷபுரம் குளத்திற்கு ஒரு புதிய கால்வாய் வெட்டப்படுகிறது.

கோட்டைகருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம் அணைக்கரை, உறுமன்குளம், கரைச்சுற்று புதூர். முதுமொத்தன்மொழி ஆனைகுடி வழியாக இடையன்குடிக்கு ஒரு தனி கால்வாய் வெட்டப்பட்டுகிறது. மேலும் திசையன்விளை ஒட்டிய எம்எல் தேரியில் நீரைத் தேக்கும் வகையில் புதிய குளம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின் இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டம் மூலம் ராதாபுரம் தொகுதி விவசாய செழிப்புள்ள தொகுதியாக  நிச்சயம் மாறும்”

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரன் ராதாபுரம் சொசைட்டி தலைவர் முருகேசன் மற்றும் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: