டாஸ்மாக் வருமானம் மூலம் சில நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் பொதுநலன் ஏதுமில்லை!: ஐகோர்ட் கிளை

மதுரை: இக்கட்டான இந்த கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதில் பொதுநலன் ஏதுமில்லை என்று உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபால். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆண்டிபட்டி அன்னை சத்யாநகர் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் என பெண்கள் அதிகளவில் கூடும் இடத்தில் தற்போது மதுக்கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், போதை மறுவாழ்வு மையத்தின் அருகில் மதுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை ஏற்கனவே அமைக்கப்பட்ட போது உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் நீதிமன்ற தடையை மீறி தமிழக அரசு அப்பகுதியில் மீண்டும் மதுபான கடையை திறந்திருக்கிறது. எனவே அன்னை சத்யாநகர் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முற்றிலும் விதிமுறைகளை மீறி எவ்வாறு மாவட்ட நிர்வாகம் இத்தகைய கடைகளுக்கு அனுமதி அளிக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி டாஸ்மாக் வருமானம் மூலம் ஒருசில நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் இதில் எந்த பொதுநலனும் கிடையாது என்று கருத்து கூறிய நீதிபதிகள், குறிப்பிட்ட கடையை உடனடியாக மூடவும் உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: