சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 7 வது இடம் குமரியை சேர்ந்த கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம் பிடித்தார்: பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் தேர்வுக்கு தயாரானதாக பேட்டி

நாகர்கோவில்: சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த இன்ஜினியர் கணேஷ்குமார் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 7 வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழக மாணவர் கணேஷ்குமார் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார். இது தமிழக அளவில் முதலிடம் ஆகும். இவரது தந்தை பாஸ்கர் மத்திய அரசு உயர் அதிகாரி ஆவார். இவரது சொந்த ஊர் சிவகாசி. தாயார் லீலாவதி ராமேஸ்வரம், பாம்பனை சேர்ந்தவர். குடும்ப தலைவி. இவரது சகோதரி பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நாகர்கோவில் புன்னை நகரில் தற்போது மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் கணேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கணேஷ்குமார் கூறியதாவது:

நான் 10ம் வகுப்பு வரை அரியானா மாநிலம் குர்கானில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்தேன். பின்னர் 2011ல் 12ம் வகுப்பு வரை மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பயின்றேன். பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஐஐடி கான்பூரில் படித்தேன். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ முடித்தேன். எம்.பி.ஏ படிக்கும்போதுதான் பாரின் சர்வீஸ் மீது எனக்கு ஆவல் ஏற்பட்டது. எம்.பி.ஏ படித்துவிட்டு பெங்களூரில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். வேலைபார்த்துக்கொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்காக படித்தேன். பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் அமர்ந்து முழுமையாக தேர்வுக்கு தயார் செய்தேன். 2018ம் ஆண்டு முதலில் தேர்வு எழுதினேன். மதிப்பெண்கள் குறைவாக கிடைத்தது.

நான் நன்றாக பயிற்சி செய்யவில்லை, எந்த விஷயங்களில் தவறுகள் செய்தேன் என்பதை கண்டுபிடித்து மீண்டும் 2019ம் ஆண்டு தேர்வு எழுதினேன். இப்போது அகில இந்திய அளவில் 7 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் ஏழாவது ரேங்க் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் 100 இடங்களில் இடம்பெற்றால் போதும், பாரின் சர்வீஸ் கிடைக்க வேண்டும் என்று எண்ணி தேர்வு எழுதினேன். இப்போது ஏழாம் இடம் கிடைத்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சி. நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு படிக்க வேண்டும் என்று கூறியபோதும் பெற்றோர் ஆதரவு அளித்தனர். தேர்வுக்காக நான் நேரடி பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவில்லை, ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக்கொண்டேன் என்றார்.

Related Stories: