திருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு நொறுக்கு தீனி விற்கும் மாணவன்: கொரோனா ஊரடங்கால் அவலம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷபி. வெளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது  ஊரடங்கு காரணத்தால் வேலையின்றி பால்னாங்குப்பத்துக்கு திரும்பி உள்ளார். இவரது மனைவி நசீமா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் தவுலத் பாஷா(14), கட்டேரி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் தந்தைக்கு வருமானம் இல்லாததால் குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டு வறுமையில் வாடி தவித்தது. குடும்ப கூட்டு முயற்சியால் நொறுக்குத் தீனிகளான, மிக்சர், பக்கோடா உள்ளிட்ட தின்பண்டகளை வீட்டில் தயார் செய்து பொட்டலமாக கட்டி திருப்பத்தூர் பகுதிகளில் மாணவன் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து மாணவன் பாஷா கூறுகையில், ‘எனது தந்தைக்கு வேலை இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். இதனால், நொறுக்குத்தீனிகளை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்தோம். அதன்படி வீட்டிலேயே நாங்கள் இந்த தொழிலை தொடங்க ஆரம்பித்து, தற்போது திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கிறது. அதனை வைத்து நாங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம்’ என்றார். பென்சில், பேனா, புத்தக சுமையை தூக்க வேண்டிய மாணவன் கொரோனா ஊரடங்கால் நொறுக்கு தீனி விற்கும் அவல  நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதை பார்த்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories: