வங்கக் கடலில் காற்றழுத்தம் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று, தேவாலாவில் 150 மிமீ மழை பெய்துள்ளது. அவலாஞ்சி 100 மிமீ, கூடலூர் 90 மிமீ, பள்ளிப்பட்டு, பந்தலூர் 80 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதியில் வளி மண்டல மேல்அடுக்கு சுழற்சி கடல் மட்டத்தில் இருந்து 7.6 கிமீ உயரத்தில் மையம் கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். தென் மேற்கு பருவக் காற்றின் மலைச் சரிவு மழைப் பொழிவு (orographic rainfall) காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

இந்த வானியல் சூழ்நிலையால் 6ம் தேதி வரை, மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று  மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் இந்த கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி வரை கடல் அலை 2.5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் உயரம் வரை எழும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: