நெல்லையில் ரூ.18 கோடியில் தாமிரபரணி மாற்றுப்பாலம்: முதல்வர் எடப்பாடி 7ம் தேதி திறந்து வைக்கிறார்

நெல்லை:  நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் கட்டப்பட்ட  மாற்றுப்பாலத்தை நெல்லை வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற  7ம் தேதி திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று அரசின் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள், எஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்திற்கு இம்மாதம் 7ம்  தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். நெல்லை கலெக்டர்  அலுவலக வளாகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் கலெக்டர்கள்,  எஸ்பிக்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் அரசு  திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் மருத்துவக் கல்லூரி  டீன்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும்  ஆலோசிக்கிறார். பல கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல்  நாட்டுகிறார். நெல்லை தாமிரபரணி ஆற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் நெல்லை சந்திப்பையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில்  சுலோக்சனா முதலியார் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு மாற்றாக  அருகிலேயே ரூ.18 ேகாடி மதிப்பீட்டில் புதிய மாற்றுப்பாலம் கட்டி  முடிக்கப்பட்டுள்ளது. இந்த தாமிரபரணி ஆற்றுப் பாலத்தையும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி போக்குவரத்திற்கு திறந்து வைக்கிறார்.

பின்னர்  தாமிரபரணி - கருமேனி ஆறு நதிநீர் இணைப்பு திட்டப் பணிகளையும் நேரில் சென்று  ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகளில் நெல்லை மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: