தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் மெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு(orographic rainfall) காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை(04.08.2020) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலாவில் 15 செ.மீ மழையும், அவலாஞ்சியில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், கூடலூர் பஜாரில் 9 செ.மீ, பள்ளிப்பட்டு, பந்தலூர் பகுதிகளில் தலா 8 செ.மீ, சின்னக்கல்லார், மேல் பவானி பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், சோலையாரில் 6 செ.மீ, சின்கோனாவில் 5 செ.மீ, தாமரைப்பாக்கம், வால்பாறை மற்றும் நடுவட்டம் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் ஆகஸ்டு 4ம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* ஆகஸ்டு 3ம்(இன்று) தேதி, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த/சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 3, 4ம் தேதிகளில், ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 4 முதல் 6ம் தேதி வரை, மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த/சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 3 முதல் 7ம் தேதி வரை, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு  6ம் தேதி, ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 4 முதல், 6ம் தேதி வரை, மகாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகளில்  பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 5ம் தேதி தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 6, 7ம் தேதினகளில், குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 04.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் அலை 2.5 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: