சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு மணி நேரத்துக்கு 8 டோக்கன் பதிவு நடைமுறையால் ஆபத்து: மக்கள் குவிவதால் கொரோனா பரவும் அச்சம்; பதிவுத்துறை மீது ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு மணி நேரத்திற்கு 8 டோக்கன் பதிவு செய்யும் நடைமுறையால் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது, கொரோனா தொற்று ஏற்பட வழிவகுக்கிறது என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வழிகாட்டி நெறிமுறைகள் இருந்தாலும்  சார்பதிவாளர் அலுவலகங்களில் இடநெருக்கடி காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை. மேலும், அலுவலகங்களில் முறையாக கிருமி நாசினி தெளிக்கப்படுவதில்லை. இதனால், சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இதனால் கொரோனாவுக்கு தென்காசி பதிவு மாவட்ட மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சுப்ரமணியன், மதுரை தெற்கு பதிவு மாவட்டம் இணை சார்பதிவக உதவியாளர் சண்முக சுந்தரம் பலியானார்கள். இது, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு 4 பத்திரங்கள் பதிவு செய்தால் போதும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் கூட்டமாக வருவது தவிர்க்கப்பட்டன.

இந்நிலையில் வருவாயை காரணம் காட்டி, தற்போது ஒரு மணி நேரத்திற்கு 8 டோக்கன்கள் வரை போடப்படுகிறது. காலை 10 மணி முதல் ஆரம்பித்து மாலை 5 மணி வரை பத்திரம் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர்.இவ்வாறு ஒரே நேரத்தில் கூட்டமாக கூடுவதால் கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கிறது என்றும், இனி வருங்காலத்தில் ஊழியர்கள் நலன் கருதியும், கூ்டம் கூடுவதை தடுக்கவும நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: