வங்கக் கடலில் காற்றழுத்தம் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்பச் சலனம் காரணமாகவும், கேரளாவில் தென்மேற்கு பருவம மழை தீவிரம் அடைந்துள்ளதாலும் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்திய வங்கக் கடல்பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி தற்போது வலுவடைந்து வருகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

அதனால் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் 6ம் தேதி வரை மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆகஸ்ட் 5ம் தேதி மேலும் வலுப்பெற்று ஒடிசா பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும்.

Related Stories: