தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் தொட்டியில் நாற்று நடவு பணி நிறைவு

ஊட்டி: -நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்வது வழக்கம். அங்குள்ள மலர் செடிகள் மற்றும் பல்வேறு தாவரங்களை கண்டு ரசிப்பது வழக்கம். அடுத்த மாதம் இரண்டாம் சீசன் துவங்கும் நிலையில், தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், இரண்டாம் சீசனின் போது அலங்கார பணிகளை மேற்கொள்வதற்காக 7 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இதில், பல்ேவறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடவு முடிந்த நிலையில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகளை பராமரிக்கும் பணியில் நாள் தோறும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்முறை தொட்டிகளில் மேரிகோல், பிகோனியா, பேன்சி, டேலியா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் சீசனுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இந்த மலர் அலங்காரங்களை காண முடியும். இல்லையேல் பார்க்க ஆளில்லாமல் போகும் அவலநிலை ஏற்படும்.

Related Stories: