திருவண்ணாமலை தீபமலையில் இருந்து மான்கள் வெளியேறுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்: காப்புக்காடு பகுதியில் நுழைய தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலையில் இருந்து மான்கள் வெளியேறுவதை தடுக்கவும், உள்வட்ட பாதையில் அனுமதியின்றி பொதுமக்கள் செல்வதை தவிர்க்கவும் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பஞ்சபூத தலங்களில், அக்னி தலம் அமைந்துள்ள திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் சிறப்புக்குரியது. இங்குள்ள தீபமலை மகேசனின் வடிவமாக வணங்கப்படுகிறது. தீப்பிழம்பால் உருவானதால் அருணாச்சலம் என அண்ணாமலையை அழைக்கின்றனர். திருவண்ணாமலை தீபமலையின் உயரம் 2,668 அடி. கிரிவலப்பாதையின் தொலைவு 14 கி.மீ. மலையின் மொத்த பரப்பளவு 718 ஏக்கர்.

கடல் மட்டத்தில் இருந்து தீபமலை 167.77 மீட்டர் உயரம். சித்தர்கள், ஞானிகள் தரிசித்த தீபமலையில், அரிய வகை மூலிகைகள் நிறைந்துள்ளன. மேலும், சந்தனம், கடுக்கன், நெல்லி, தான்றிக்காய், அவிஞ்சில், புலவு, நரிவிழி, சரக்கொன்றை, இளுப்பை, பரம்பை, வால்சுறா, காட்டுக்குறிஞ்சி, மனல்புலரி, அகில், உறைப்புங்கன், நிலவேம்பு, நீர்மத்தி, ஆடுதொடா உள்ளிட்ட மூலிகைகள் மலையில் உள்ளன. அதோடு, நீலமுக செண்பகம், கருங்கலை, குயில் கீச்சான், கொம்பன் ஆந்தை, புள்ளிப்பருந்து, நீலபஞ்சிட்டான் போன்ற அரியவகை பறவைகள், அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான சிங்கவால் குரங்கு, புள்ளி மான்கள், முள்ளம்பன்றி, எறும்புத்திண்ணி, காட்டுப்பூனை போன்றவைகளும் இம்மலையில் வாழ்கின்றன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு கடந்த 4 மாதங்களாக அமலில் இருப்பதால், கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வதை தவிர்த்து, வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ள உள்வட்ட கிரிவலப்பாதையில் சமீப நாட்களாக பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மேலும், ஒருசிலர் தடையை மீறி மலைமீது செல்வதும் நடக்கிறது. அதனால், பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. அதோடு, போக்குவரத்தும், ஆட்கள் நடமாட்டமும் முடங்கியிருப்பதால், தீபமலை மற்றும் காப்புக்காட்டில் இருந்து புள்ளி மான், மயில் போன்றவை கிரிவலப்பாதையை கடந்து விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது அதிகரித்துள்ளது.

அதனால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிட்டது. எனவே, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள மலை சுற்றுப்பாதை காப்புக்காடு பகுதியில் இரும்பு கம்பியால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செங்கம் இணைப்பு சாலையில் தொடங்கி, பச்சையம்மன் கோயில் வரை மலையடிவாரத்தில் தடுப்பு வேலி அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. அதோடு, தடை செய்யப்பட்டுள்ள உள்வட்ட கிரிவலப்பாதை வழியாக பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகைகளையும் பல இடங்களில் அமைத்துள்ளனர். இந்த பணியின் மூலம், தீபமலை மீது செல்வதும், காப்புக்காடு வழியாக கிரிவலம் செல்வதும் தடுக்கப்படும். அதேபோல், காப்புகாட்டில் இருந்து வெளியேறி, பலியாகும் மான்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது.

Related Stories: