பரமக்குடி வைகை ஆற்றில் பிரியும் பிரதான கால்வாய் ஷட்டர்கள் சேதம்: தண்ணீர் தேக்குவதில் சிக்கல்

பரக்குடி: பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து பிரியும் பிரதான கால்வாயில் ஷட்டர்கள் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வரும் நீரை வலது மற்றும் இடது புறங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதற்காக ஆற்றின் இடையே கால்வாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் வைகை ஆறு தடுப்பு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் என பிரிக்கப்படுகிறது. இதன் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நுாற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 கண்மாய்கள் குடிமராமத்து பணிகள் மூலம் கால்வாய், கண்மாய்மற்றும் மடைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.ஆனால், வைகை ஆற்றையொட்டியுள்ள கால்வாய்களில் செல்லும் உபரி நீரை கடத்துவதற்கு பொருத்தப்பட்டுள்ள ஷட்டர்கள் பல்வேறுஇடங்களில் சேதமடைந்து வீணாகி வருகிறது. இதனால் குறைந்த அளவு தண்ணீர் வரும் காலங்களில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் கால்வாய்களில் வீணாகும் வாய்ப்புள்ளது. இதனால் வைகை ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.ஆகையால், கால்வாய்கள் மற்றும் கண்மாய் குடிமராமத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொதுப்பணித்துறையினர் இதுபோன்ற ஷட்டர்களையும் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: