ஆகஸ்ட் 31ம் தேதி வரை தடை நீடிப்பு 2ம் சீசனுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர வாய்ப்பு இல்லை

ஊட்டி:  கொரோனா  பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர ஆகஸ்ட் மாதம்  வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மக்கள்  பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்  தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வது வழக்கம். தேயிலைக்கு  அடுத்தப்படியாக சுற்றுலா சார்ந்த தொழில்கள் நீலகிரி மாவட்டத்தின்  பொருளாதாரத்தை நிர்ணயித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மூலம் அரசு மற்றும் தனியாருக்கு நாள் தோறும் பல லட்சம் முதல் கோடி வரையில்  வருவாய் கிடைத்து வருகிறது.

அதேபோல், லாட்ஜ்,  காட்டேஜ், ரெசார்ட். ஓட்டல்கள் மற்றும் சாதாரண உணவகங்கள் என அனைத்துமே  சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த  மார்ச் மாதம் 2வது வாரம் முதல் சுற்றுலா பயணிகள் வர தடை  விதிக்கப்பட்டது. இதனால், அனைத்து தொழில்களும் முடங்கின. சுற்றுலா பயணிகளை  நம்பி தொழில் செய்து வந்தவர்கள் வாழ்வாதரங்களை இழந்தனர். பொதுவாக முதல்  சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு  வருவார்கள். அப்போது வியாபாரிகளுக்கு அதிக விற்பனையாகும்.  இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களின் குடும்பச்செலவு, குழந்தைகளின்  படிப்பு என அனைத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இம்முறை  சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தின்  பொருளாதாரமே பாதித்துள்ளது.இங்குள்ள பல பெரிய ஓட்டல்கள் மற்றும்  ரெசார்ட்டுக்களை நடத்தி வந்த வெளி மாநிலத்தவர்கள், அதனை திரும்ப  உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.  அதேபோல், காட்டேஜ்களை நடத்தி வந்தவர்களும் அதனை விட்டுவிட்டு  சென்றுவிட்டனர். தமிழக அரசு  மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே சென்று வர கட்டாயம் இ  பாஸ் வேண்டும் என கூறியுள்ளது. மேலும், நீலகிரி, கொடைக்கானல் மற்றும்  ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு செல்ல தொடர்ந்து தடை ஆகஸ்ட் மாதம் வரை  நீடிக்கும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆகஸ்ட் மாதம் மட்டுமின்றி,  இரண்டாம் சீசனுக்கும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பில்லை என  தெரிகிறது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பி நீலகிரி மாவட்டத்தில் தொழில்  செய்து வருபவர்கள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: