தஞ்சையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேர்மை விபத்தில் காயமடைந்து மயங்கியவரின் 4 லட்சம் தந்தையிடம் ஒப்படைப்பு

ஒரத்தநாடு: தஞ்சை அருகே விபத்தில் சிக்கி மயங்கி கிடந்த காண்ட்ராக்டரிடம் இருந்த ரூ.4.20 லட்சத்தை அவரது தந்தையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அலெக்சாண்டர் (37). வெளிநாடுகளில் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலையாட்கள் அனுப்பும் பணி செய்து வரும் இவர், நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது தனியார் பள்ளி அருகில் சாலையில் காய வைப்பதற்காக வைத்திருந்த உளுந்து குவியல்கள் தெரியாததால் எதிர்பாராதவிதமாக அதில் பைக் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அலெக்சாண்டர் மயங்கி கிடந்தார்.அப்போது அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஒரத்தாட்டில் இருந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அலெக்சாண்டரை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டர் வந்த பைக்கில் ரூ.4,20,309 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை ஆம்புலன்ஸ் டிரைவரான செக்கூரை சேர்ந்த கர்ணன்(30), டெக்னீஷியனான கருக்காக்கோட்டையை சேர்ந்த தவக்குமார் (32) ஆகியோர் எடுத்து பத்திரமாக வைத்து கொண்டனர். பின்னர் அலெக்சாண்டரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்ட இருவரும், விபத்தில் சிக்கிய மகனை மருத்துவமனையில் சேர்த்தது குறித்தும்,அவர் வைத்திருந்த பணத்தை பத்திரமாக வைத்துள்ளோம். நீங்கள் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினர். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற செல்வராஜிடம் ரூ.4,20,309 ரொக்கத்தை ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன், டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் நேர்மையை சகபணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: