தனது வீட்டில் கால்வாய் அடைப்பை சீரமைக்கவில்லை என குடிநீர் வாரிய ஊழியரை தாக்கிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்: நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்

பெரம்பூர்: புழல் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (25). சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தினசரி எம்கேபி நகரில் உள்ள 4வது மண்டல அலுவலகம் சென்று, அதன்பிறகு 35வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு, மண்டல அலுவலகத்தில் கோகுல் இருந்தபோது, அங்கு வந்த 35வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், வடசென்னை வடகிழக்கு புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளருமான டேவிட் ஞானசேகர் என்பவர், ‘‘கடந்த 3 நாட்களாக எனது வீட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய அழைத்தால் ஏன் வரவில்லை, என கோகுலிடம் கேட்டுள்ளார்.

அதற்கு கோகுல், வேலை அதிகமாக இருந்ததால்தான் வர முடியவில்லை, என தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டேவிட் ஞானசேகரன், கோகுலின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.

இதுகுறித்து உயரதிகாரியிடம் கோகுல் முறையிட்டார். அதன்பேரில், அவர்கள் டேவிட் ஞானசேகரை மறுநாள் அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். இதையடுத்து, நேற்று காலை டேவிட் ஞானசேகர் மீண்டும் மண்டல அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

அப்போது அவருடன் வந்த சிலர், ‘‘நீங்கள் எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்தால், நாங்களே சட்டையை கிழித்துக்கொண்டு நீங்கள் தான் கிழித்தீர்கள் என்றும், அடைப்பு எடுப்பதற்க்கு 2,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் புகார் செய்வோம். நாங்கள் வெள்ளை சட்டை அணிந்தவர்கள் நீல நிற சட்டையை பார்த்து பயப்பட மாட்டோம், என மிரட்டியுள்ளனர். இதனால், அங்கிருந்த சக ஊழியர்கள் சிலர் புகார் ஏதும் கொடுக்க வேண்டாம், என ஒதுங்கி கொண்டனர். இறுதியில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனி தலைமையில், நேற்று மதியம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் டேவிட் ஞானசேகர் மீது புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: